மேட்டூர் உபரிநீர் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடையவில்லை. நிலம் கையகப்படுத்தப்பட்டதும், பணிகளை துரிதப்படுத்தி,திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
மேட்டூர் உபரிநீர் திட்டத்தின் கீழ் மேட்டூர் திப்பம்பட்டியில் கட்டப்பட்டுள்ளள நீரேற்று நிலையத்தில் இருந்து வறண்ட 100 ஏரிகளுக்கு உபரிநீரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, மேட்டூர் அணை நிரம்பியுள்ள நிலையில், திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல மின் மோட்டாரை நேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இயக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மேட்டூர் அணை பலமாக உள்ளது அதன் முழு கொள்ளளவான 120 அடியை நீர்மட்டம் எட்டிய நிலையில் கடந்த 3 நாட்களாக அதேநிலையில் நீர் மட்டம் நீடித்து வருகிறது.
“மேட்டூர் அணை உபரி நீர்திட்டத்தை நானே அறிவித்து, நானே தொடங்கி வைத்தேன் என அப்போதைய முதல்வர் கூறியிருக்கலாம். நானே திட்டத்தை முடித்து வைப்பேன்” என்று அவர் கூறவில்லை. திமுக ஆட்சியில்தான் திட்டம் முடித்து வைக்கப்படும் என்பதையும் அவர் கூறியிருக்கலாம்.
உபரிநீர் திட்டப் பணிகள் நிறைவடையாமல் இருப்பதால், இப்போது நான்கைந்து ஏரிகளுக்கு மட்டுமே தண்ணீரை கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது. இத்திட்டத்தை அவசரகதியில் தொடங்கி ஆங்காங்கே சில குழாய்களை பதித்து திட்டத்தை செயல்படுத்தி விட்டதாக ஒரு பிரமையை ஏற்படுத்தியுள்ளனர். இத்திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடையவில்லை. நிலம் கையகப்படுத்தப்பட்டதும், பணிகளை துரிதப்படுத்தி திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா, சேலம் ஆட்சியர் கார்மேகம், உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனிடையே, நீரேற்று நிலையத்தில் இருந்து மேச்சேரி அடுத்த எம்.காளிப்பட்டி ஏரிக்கு வந்த உபரிநீரை அமைச்சர் துரைமுருகன் மலர் தூவி வரவேற்றார். ஏரிக்கு மேட்டூர் நீர் வந்ததை அப்பகுதி மக்களும் திரளாக வந்து பார்த்துச் சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago