புதுகை மாவட்டத்தில் தொடர்மழையால் உயிரிழந்து வரும் கால்நடைகள் :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டு இயல்பைவிட அதிக அளவு மழை பெய்துள்ளதால், கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. தொடர்மழை காரணமாக மாவட்டத்தில் சுமார் 500 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

பாசிப்பட்டி, நெடுவாசல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அடுத்தடுத்து கால்நடைகள் உயிரிழப்பது விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. தொடர்ந்து, மருத்துவ முகாம் அமைத்து கால்நடைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கால்நடை மருத்துவர்களுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறையின் மாவட்ட இணை இயக்குநர் சம்பத் கூறியது: தொடர் மழை பெய்துவருவதால் கால்நடைகள் பெரும்பாலும் மழையில் நனைந்துவிடுகின்றன. மேலும், கட்டுத்தறியும் ஈரமாக இருப்பதோடு, சாரலும் வீசுவதால் மாடு மற்றும் ஆடுகளுக்கு அளவுக்கு அதிகமாக குளிர்ச்சி ஏற்படுகிறது.

இதனால், நுரையீரல் கோளாறு ஏற்பட்டு கால்நடைகள் உயிரிழக்கின்றன. இதுவரை, மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து தேவையான இடங்களில் நடத்தப்படும். மேலும், கோமாரி நோய்க்கு விரைவில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்