பாதாளச் சாக்கடை மற்றும் குடிநீர் திட்டப் பணிகளால் ஈரோட்டில் சேதமடைந்த அனைத்து சாலைகளும், அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சரி செய்யப்படும், என வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட திண்டலில், ரூ.21.20 கோடி மதிப்பீட்டில், சாலை மற்றும் இரு பூங்கா அமைக்கும் பணியை வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து புதுக்காலனி பகுதியில் பெரும்பள்ளம் ஓடை தூர்வாரும் பணியைப் பார்வையிட்டார். அப்போது அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈரோடு மாநகராட்சியால் 696.72 கி.மீ. சாலை பராமரிக்கப்பட்டு வருகிறது. பாதாளச் சாக்கடைத் திட்டம் மற்றும் குடிநீர் திட்டங்களால் 684 கி.மீ. சாலை சேதமடைந்துள்ளன. இதில் அரசின் பல்வேறு திட்டங்களால், 466 கி.மீ. சாலை சீரமைக்கப்பட்டுள்ளன. பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளால் சேதமடைந்த 71 கி.மீ. சாலைகளை முன்னுரிமை அடிப்படையில் உடனுக்குடன் சீரமைப்பு செய்யப்படும். ஈரோட்டில் சேதமடைந்த அனைத்து சாலைகளும், அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் முழுமையாக சீரமைக்கப்பட்டுவிடும்.
சென்னையில் பெய்த கனமழை காரணமாக, பாதிக்கப்பட்ட வீட்டு வசதி வாரிய கட்டிடங்களை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குடியிருப்போர் சங்கத்தினர் அரசுடன் இணைந்து செயல்பட்டால், விரைவில் பணிகளை நிறைவு செய்ய முடியும். மழையால் பாதிக்கப்பட்ட வீட்டுவசதி வாரிய கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது. சேதமடைந்த கட்டிடங்கள் விரைவில் சீரமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி, மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago