 ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு - திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வஸ்திர மரியாதை :

By செய்திப்பிரிவு

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று நடைபெற்ற கைசிக ஏகாதசி விழாவையொட்டி, திருமலை திருப்பதி தேவஸ் தானம் சார்பில் ரங்கம் கோயிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது.

ரங்கத்தில் கி.பி.1320-ம் ஆண்டில் நடைபெற்ற முகலாய படையெடுப்பின் காரணமாக ஏறத்தாழ 40 ஆண்டுகள் ரங்கம் கோயில் உற்சவரான நம்பெருமாள் திருமலை வெங்கடாசலபதி கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தார். இந்த மண்டபம் திருமலை கோயிலில் ரங்கநாயகலு மண்டபம் என்ற பெயரில் இன்றும் உள்ளது.

திருமலைக்கும், ரங்கத்துக்கும் நீண்டகாலமாக மங்கலப் பொருட்கள் பரிவர்த்தனை இருந்தது. காலப் போக்கில் அவை நின்று விட்டன. தற்போது அவை ஒவ்வொன்றாக புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் ஆண்டுதோறும் கைசிக ஏகாதசி நாளில் ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து புதுவஸ்திர மரியாதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு மூலவர் ரங்கநாதர், உற்சவர் நம்பெருமாள், தாயார் ரங்கநாச்சியார் மற்றும் ராமானுஜர் ஆகியோருக்கு வஸ்திரங்கள், குடைகள், மரியாதைகள் ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு கோயிலுக்கு எடுத்து வந்தனர்.

இந்த பொருட்கள் நேற்று ரங்கம் கோயிலில் உள்ள ரங்கவிலாச மண்டபத்தில் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு வீதியுலாவாக எடுத்து வரப்பட்டு, கருடாழ்வார் மண்டபத்தில் ரங்கம் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்துவிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையர் கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணா மற்றும் கோயில் ஊழியர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்