திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கோரி க்கை மனுக்களை அளித்தனர்.
மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் நிஜாம்தீன் அளித்துள்ள மனுவில், ‘திருநெல்வேலி மாநகராட்சி புதிய வார்டு எண் 18-க்கு உட்பட்ட பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டத்துக்கான பணிகள் நிறைவடைந்து விட்டன.ஆனால், சாலைகள் அமைக்காததால் தெருக்களில் தண்ணீர் தேங்கி சகதியாக காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர். உடனடியாக சாலை அமைக்கவேண்டும். மேலும், மரைக்கான்குளம், கருவேலங்குளம் ஆகியவைபல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் எளிதில் நிரம்பி, கரோயோரப் பகுதிகளில் நீர் புகும் அபாயம் உள்ளது. குளங்களை தூர்வாரி கரைகளை உயர்த்த வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
கட்டாரன்குளம் கிராம மக்கள் சார்பில் சுப்புத்தாய் என்பவர் அளித்துள்ள மனு: ‘எங்கள் ஊரில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சிலர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. மிகுந்த சிரமங்களுடன் எங்கள் குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனர். சமூக உரிமைகள் மறுக்கப்படுவதுடன், அநாகரிகமான முறையில் நடத்தப்படுகிறோம்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஜாதிய கொடுமைகள், தாக்குதல்கள் நடக்காமல் தடுக்க வேண்டும்’.
தமமுக, மமக மாவட்ட துணைத் தலைவர் மைதீன் பாதுஷா அளித்துள்ள மனுவில், ‘அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டாம். கல்வி கற்பதில் மாணவிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என்ற நம்பிக்கையை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் பொருட்டு இந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய குழந்தைகள் நல அலுவலரின் செல்போன் எண்ணை பள்ளிகளில் அனைவரின் பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
மானூர் வட்டம், வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனு: ‘கங்கைகொண்டானில் இருந்து வெங்கடாசலபுரம் செல்லும் சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆகின்றன. இந்தச் சாலை மோசமான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். அதிகாரிகளிடம் பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும்’.
பாளையங்கோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த காய்ச்சல் தடுப்பு களப்பணியாளர்கள் அளித்துள்ள மனு விவரம்: ‘எங்களுக்கு தினக்கூலியாக ரூ.388 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் பாளையங்கோட்டை ஒன்றியத்தில் எங்களுக்கு தினக்கூலியாக ரூ.320 மட்டுமே வழங்கப்படுகிறது. 388 ரூபாய்தினக்கூலியை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’.
அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் 368 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வர்க்கீஸ் தலைமையில் நிர்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், ‘தென்காசி மேல வாலியன்பொத்தை பகுதியில் நரிக்குறவர் சமுதாயத்தினர் மற்றும் திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.
கீழ வாலியன்பொத்தையில் இருந்து மேல வாலியன்பொத்தைக்கு செல்லும் சாலை ஆக்கிரமிப்பு காரணமாக அகலம் குறைந்துள்ளது. மேலலாலியன்பொத்தையில் வசிக்கும் மக்கள் தெருவிளக்கு, சாலை வசதியின்றி சிரமப்படுகின்றனர். பொதுக்கழிப்பிடம் பராமரிப்பின்றி மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இப்பகுதி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ரயில் பாதைக்கு கீழ் உள்ள நீர்ப்பாதை அடைபட்டு இருப்பதால் நரிக்குறவர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. இதற்கும் தீர்வு காண வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago