தொடர் மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் 60 நீர்நிலைகள் நிரம்பியுள்ளது, என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார்.
தொடர் மழையால் கெங்கவல்லி வட்டம், ஜங்கமசமுத்திரம் ஏரி நிரம்பியது. ஏரியை நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆய்வு செய்தார். பின்னர் ஆட்சியர் கூறியதாவது:
மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து 44-வது முறையாக உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் தற்போது பெய்துள்ள மழையினால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்துக்கு தென்மேற்கு பருவ மழை சராசரியாக 440.60 மிமீ பெய்யும். இந்தாண்டு 540.54 மிமீ மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழைமாவட்டத்தில் சராசரியாக 370.50மிமீ ஆகும். இதில் கடந்த 13-ம் தேதிவரை 360.03 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதனால், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மீதமுள்ள நீர்நிலைகளும் நிரம்பும் நிலையில் உள்ளன.
சேலம் மாநகராட்சி பகுதியில் 3 நீர்நிலைகளும், ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் 276 நீர்நிலைகளும், பேரூராட்சிகளின் கட்டுப்பாட்டில் 44 நீர்நிலைகளும், பொதுப்பணித்துறை (மேட்டூர் அணைக் கோட்டம்) கட்டுப்பாட்டில் 18 நீர்நிலைகளும், பொதுப்பணித்துறை சரபங்கா கட்டுப்பாட்டில் 89 நீர்நிலைகளும் என மொத்தம் 430 நீர்நிலைகள் உள்ளன.
இவற்றில், தற்போது வரை 60 நீர்நிலைகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 49 நீர் நிலைகள் 75 சதவீதமும், 35 நீர்நிலைகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளன. மழை தொடர்வதால், மீதமுள்ள நீர்நிலைகளின் நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகின்றது.
நடப்பு ஆண்டில் சேலம் மாவட்டத்தில் தற்போது வரை 1 லட்சத்து 80 ஆயிரத்து 133 ஹெக்டேர் பரப்பளவில் நெல், கரும்பு, பருத்தி, சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, பழங்கள், காய்கறிகள், வாசனை திரவியங்கள், மலைப்பயிர்கள் உள்ளிட்டதோட்டக்கலைத் துறை பயிர்கள்60 ஆயிரத்து 949 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது பெய்துவரும் பருவ மழையினால் இந்த ஆண்டு விளைச்சல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா தேவி, இணை இயக்குநர் (வேளாண்மை) கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago