பர்கூர் மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால், தமிழகம் - கர்நாடகா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் வழியாக கர்நாடகா செல்லும் சாலையில், முதல் கொண்டைஊசி வளைவு பகுதியில் (செட்டிநொடி) கடந்த மாதம் 22-ம் தேதி மண்சரிவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அதே பகுதியில் கடந்த 8-ம் தேதி மண்சரிவு ஏற்பட்டது. இந்த மண்சரிவு அகற்றப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த சாலையில் கனரக வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கடந்த இரு நாட்களாக பெய்த மழையின் காரணமாக, முதல் கொண்டை ஊசி வளைவு பகுதியில் நேற்று காலை மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. சாலையில் மண் மற்றும் பாறைகள் விழுந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு தமிழகம் -கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அந்தியூரில் இருந்து வந்த வாகனங்கள் வரட்டுப்பள்ளம் வன சோதனைச்சாவடியில் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டன.
மண் சரிவு காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள 32 கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். இப்பகுதிகளுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் செல்ல முடியாததால், கரோனா தடுப்பூசி போடும் பணியும் பாதிக்கப்பட்டது.
இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண்சரிவை அகற்றும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அங்கு விழுந்த மரங்களை வனத்துறையினர் அகற்றியுள்ளனர். பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டு, மண்சரிவு முழுமையாக அகற்றப்பட்ட பின்னர் இன்று மீண்டும் வாகனப்போக்குவரத்து அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்தியூர் - பர்கூர் சாலையில் அடிக்கடி மண்சரிவு ஏற்படுவதால், தங்களுக்கு மாற்றுப்பாதை அமைத்துத் தர வேண்டும் என பர்கூரைச் சுற்றியுள்ள 32 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago