ஈரோடு மாவட்டத்தில் தொடரும் அவலம் - மழைக்காலங்களில் ‘தீவுகளாக’ துண்டிக்கப்படும் மலைக் கிராமங்கள் : பாலம் கட்டித்தர மக்கள் கோரிக்கை

By எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, கடம்பூர் வனப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மலைக் கிராமங்கள் துண்டிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள தாளவாடி,கடம்பூர், பர்கூர் உள்ளிட்ட மலைப்பகுதியையொட்டி ஏராளமான கிராமங்கள் உள்ளன.பழங்குடியினர் மற்றும் இதர பிரிவினர் வசிக்கும் இந்த கிராமங்கள் வனப்பகுதிகளையொட்டி அமைந்துள்ளன. இந்த கிராமங்களை, அருகில் உள்ள நகரங்களுக்கு இணைக்கும் சாலைகள் வனப்பகுதியிலும், சிறிய ஓடைகளைக் கடந்தும் செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும், இந்த சாலைகளில் பயணித்து அருகாமை ஊர்களுக்கு கிராம மக்கள் செல்ல வேண்டியுள்ளது. பருவமழை காலங்களில் இந்த சாலைகளை மூழ்கடித்து வெள்ளம் செல்வதால், கிராம மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கிராமங்களை இணைக்கும் சாலைகள் வனப்பகுதியையொட்டி உள்ளதால், கனமழை காலங்களில் புதிய அருவிகள் உருவாவதோடு, திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்படுகிறது. இந்த கட்டாற்று வெள்ளம், ஓடைகளில் கலந்து வெள்ளபெருக்கை ஏற்படுத்தி வருகிறது.

தாளவாடி பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தலமலையில் இருந்து தாளவாடிக்கு செல்லும் சாலையில் உள்ள சிக்ஹள்ளி தரைப்பாலம் மூழ்கியது. இதே போல், பாலப்படுகை என்ற இடத்தில் உள்ள சாலையிலும் தரைப்பாலம் மூழ்கியது. இதனால்,இந்த சாலைகளில் பேருந்து மற்றும் வாகனப்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வெள்ளநீர் வடிந்தவுடன் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது என்றாலும், எப்போது வேண்டுமானாலும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்ற அச்சத்துடன் கிராமமக்கள் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. கடம்பூர்வனப்பகுதியில் கனமழை பெய்யும்போதெல்லாம், வெள்ளப்பெருக்கின் காரணமாக, மாக்கம்பாளையம், கோவிலூர், அரிகியம், கோம்பைத்தொட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு பேருந்து சேவைகள் நிறுத்தப்படுகின்றன. மாக்கம்பாளையம் சாலையில்செல்லும் இரு காட்டாறுகளின் குறுக்கே பாலம் கட்ட அரசு அனுமதி அளித்தும், இதுவரை பணிகள் தொடங்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதே போல், நீலகிரியில் கனமழை பெய்யும்போதெல்லாம் மாயாற்றில்வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் தெங்குமரஹாடா உள்ளிட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. ஆபத்தை உணராமல், வெள்ளப்பெருக்கு காலங்களில் மாயாற்றைக் கடக்க முயற்சிக்கும் வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

மழைக்காலங்களில் தீவுகள் போல இந்த கிராமங்கள் துண்டிக்கப்படுவதற்கு தீர்வு காணும் வகையில், வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களை அடையாளம் கண்டு,அங்கு பாலம் அமைத்துத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்