தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு, மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு அக்.2-ம் தேதி முதல் நவ.14-ம் தேதி வரை சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் திருச்சியில் சட்ட விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து பேரணியை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஒய்.கிளாட்ஸ்டன் பிளசட் தாகூர் தொடங்கி வைத்தார். இதில், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், தன்னார்வலர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எம்ஜிஆர் சிலை வழியாக புத்தூரிலுள்ள அரசு மருத்துவமனை வரை சென்று, பின்னர் அங்கிருந்து நீதிமன்றத்துக்கு திரும்பி வந்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான கே.விவேகானந்தன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் பெரம்பலூரில் சட்ட விழிப்புணர்வு நடைபயணம் நேற்று நடைபெற்றது.
பாலக்கரை பகுதியில் நடைபய ணத்தை தொடங்கிவைத்து கலந்து கொண்ட மாவட்ட முதன்மை நீதிபதி பல்கீஸ், சட்ட விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்டபடி சென்றார். நடைபயணம் பாலக்கரை ரவுண்டானா வழியாக புதிய பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் பாலக்கரையில் முடிவடைந்தது. இதில் மகளிர் நீதிமன்ற நீதிபதி கிரி, முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் மூர்த்தி, சார்பு நீதிபதிகள் லதா, சகிலா, மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி, வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் நீதித்துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago