பின்னலாடைகளின் விலை 20 சதவீதம் வரை உயர்வு : திருப்பூர் சைமா சங்கம் தகவல்

திருப்பூர் சைமா (தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம்) சார்பில் அதன் தலைவர் ஏ.சி. ஈஸ்வரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனா தொற்று பரவலால் பின்னலாடைத் தொழில் பாதிப்படைந்தது. கரோனாவால் நின்றுபோன ஆர்டர்களும், வெளியிடங்களுக்குச்சென்ற தொழிலாளர்களும் திரும்ப வந்துகொண்டிருக்கும் சமயம் இது. எதிர்பாராதவிதமாக நூல் விலை கிலோவுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. பின்னலாடைத் தொழிலுக்கும், அதனை சார்ந்து இயங்கும் தொழில்களுக்கும் தேவையான மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக உப தொழில்கள் அனைத்தும் தங்களுடைய கூலி மற்றும் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. பின்னலாடைத் தொழிலாளர்களுக்கு சம்பள விகிதமும் சமீபத்தில் உயர்த்தி ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்நிலையில் பின்னலாடை விலையை உயர்த்துவதைத் தவிர, வேறு வழியில்லை. கடந்த 12-ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில், பின்னலாடைகளுக்கான விலையை நவ.15 (நாளை) முதல், 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரைஉயர்த்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் தங்களுடைய நிறுவனத்தில் தயாரிப்பு செலவுகள், தயாரிப்பின் தரம் மற்றும் தங்களுடைய வியாபார எல்லை போன்றவற்றை கணக்கில்கொண்டு, புதிய விலை உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டும். தாங்கள் நிர்ணயிக்கும் நியாயமான விலை, பின்னலாடை வியாபாரிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் ஏற்புடையதாக அமையட்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE