மழைக்கால நோய் பாதிப்பை தடுக்க - நாடமாடும் மருத்துவக் குழு மூலம் பரிசோதனை :

By செய்திப்பிரிவு

மழைக்கால நோய் பாதிப்புகளை தடுக்க சேலம் மாவட்டம் முழுவதும் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம்பொதுமக்களுக்கு பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடமாடும் மருத்துவ முகாம் வாகனத்தை தொடங்கி வைத்து ஆட்சியர் கார்மேகம் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் பருவமழையால், தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் பொது சுகாதாரம் மற்றும் உள்ளாட்சித் துறைகள் சார்பில் தேவையான ஒருங்கிணைந்த முன்தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர்மழை பெய்துள்ளதையொட்டி, பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று மருத்துவப் பரிசோதனை செய்யும் வகையில் சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் அனைத்து வட்டாரப் பகுதிகளில் 249 மழைக்கால நடமாடும் மருத்துவ முகாம்களும், 87 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும்14 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ முகாம்களும் நடைபெறுகிறது.

மருத்துவ முகாம்களில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தோல்வியாதி, பூச்சி மற்றும் விலங்குகளால் ஏற்படும் பாதிப்பு நாய்கடி, பாம்புகடி, மூச்சுத்திணறல், மஞ்சள் காமாலை, உணவு மற்றும் நீரினால் பரவும் நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இம்முகாம்களில், 21 நடமாடும் மருத்துவக்குழு வாகனங்களும், 42 பள்ளிசிறார் வாகனங்கள், 20 மக்களைத்தேடி மருத்துவ வாகனங்கள் என மொத்தம் 83 வாகனங்கள் மூலம் மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், எம்பி பார்த்திபன், எம்எல்ஏ-க்கள் அருள் (சேலம் மேற்கு), சதாசிவம் (மேட்டூர்) சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ஜெமினி (ஆத்தூர்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்