திருச்சி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் நேற்று நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாமை தேர்தல் ஆணையத்தின் சிறப்புப் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மன்னார்புரம் செங்குளம் காலனியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் நடைபெற்ற முகாமை இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு பார்வையாளரும், தமிழக அரசின் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சிறப்பு அரசு செயலாளருமான பி.மகேஸ்வரி ஆய்வு செய்தார். அப்போது, ஆட்சியர் சு.சிவராசு உடனிருந்தார்.
சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணிகள் குறித்து சந்தேகங்கள் இருந்தால் சிறப்புப் பார்வையாளரை 044 25674302, 9445252243 ஆகிய தொலைபேசி எண்கள் அல்லது er22maptk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். இந்த முகாம் நவ.14, 27, 28 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது.
கரூர் மாவட்டத்தில் 619 வாக்குச்சாவடி அமைவிடங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்கத் திருத்தப் பணிகள் நேற்று நடைபெற்றன. கரூர் மற்றும் குளித்தலையில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஆட்சியர் த.பிரபு சங்கர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார். கங்கைகொண்டசோழபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முகாமை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago