ராணிப்பேட்டை மாவட்டத்தில் நீர் நிலைகள் நிரம்பி உள்ளதால் பொது மக்களின் பாதுகாப்புப் பணிக்காக 384 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா பாலாறு அணைக்கட்டில் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறி வருகிறது. பொன்னை, கொசஸ்தலை ஆறு மற்றும் பாலாற்றில் ஏற்பட்டுள்ள நீர்வரத்தால் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், முக்கிய நீர்நிலை மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சாலைகளில் பாதுகாப்புப் பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் நீர்நிலை பாதுகாப்புப் பணியில் 326 காவலர்கள், பேரிடர் மீட்பு பயிற்சி முடித்த 58 பேர் என 384 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதுடன் நீந்துவதில் தேர்ச்சி பெற்ற 85 தன்னார்வலர்கள் தேவைப்படும் நேரத்தில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபாசத்யன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதுடன் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, ஆறு மற்றும் ஓடைகளின் தரைப்பாலங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளை நீர்நிலைகளில் இறங்காமல் இருக்க பெற்றோர் கவனித்துக்கொள்ள வேண்டும். சாலை பள்ளங்கள், அறுந்துகிடக்கும் மின் கம்பிகளால் ஆபத்து ஏற்படும் என்பதால் அதிகாலை நேரத்தில் இருள் சூழ்ந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அவசர உதவிக்கு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 04172-271100 அல்லது 98840 98100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago