‘வரும்முன் காப்போம்’ திட்டத்தின் கீழ் நடைபெறும் - மருத்துவ முகாம்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் : செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வேண்டுகோள்

வரும் முன் காப்போம் திட்டத்தின்கீழ் 16 சிறப்பு மருத்துவர்கள் பங்குபெறும் மருத்துவ முகாம்கள் ஒவ்வொரு வட்டார அளவிலும் நடைபெறும் எனவும், இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் மாதப்பூர் ஊராட்சியில் தமிழக அரசின் ‘வரும் முன் காப்போம்’ திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமை வகித்தார். தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:

தமிழகத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் இல்லத்துக்கே சென்று மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

படுத்த படுக்கையாக உள்ளநோயாளிகளுக்கு இயன்முறை மருத்துவ சிகிச்சையாளர் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதவிர, ‘வரும் முன் காப்போம்’ திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வட்டார அளவிலும் மருத்துவ முகாம்கள் நடைபெறும். ஒவ்வொரு முகாமிலும் மருத்துவர், மகப்பேறு மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் உள்ளிட்ட 16 சிறப்பு மருத்துவர்களால் மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, தேவைப்படும் நபர்களுக்கு கூடுதல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும். தமிழக அரசின் இத்திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. பொதுமக்கள் இத்திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். விழாவில், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தலைவர் குமார், மாதப்பூர் ஊராட்சித் தலைவர் அசோக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE