உமையஞ்செட்டிபாளையத்தில் பழுதான சாலையில் - வாழைக்கன்று நடவு செய்து போராட்டம் :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி- மங்கலம்சாலை பிரிவில் இருந்து உமையஞ்செட்டிபாளையம் வழியாக அம்மாபாளையம் எம்ஜிஆர் நகர் வரை குடிநீர்குழாய் பதிப்பதற்காக சில மாதங்களுக்கு முன்பு சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. இதனால் அந்த சாலை சிதிலமடைந்து, வாகனஓட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளதாகவும், சாலையை சீரமைக்க வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சாலையைசீரமைத்துத் தர வலியுறுத்தி உமையஞ்செட்டி பாளையத்தில் பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் சிதிலமடைந்துள்ள சாலையில் வாழை மரக்கன்றுகள் நடவு செய்யும் போராட்டம் நேற்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் தேவராஜன் தலைமை வகித்தார். வேலாயுதம் பாளையம் ஊராட்சி மன்ற நிர்வாகிகள், திருமுருகன்பூண்டி பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது, வேலாயுதம்பாளையம் ஊராட்சி சார்பில் தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும். திருமுருகன்பூண்டி பேரூராட்சி சார்பில் குடிநீர் குழாய்இணைக்கும் பணிகள் இரு இடங்களில் நடைபெறாமல் உள்ளன. பணிகள் நடைபெற்றவுடன், விரைவில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்