மதுரை பெரியார் பேருந்து நிலைய ஸ்மார்ட் சிட்டி கட்டுமானப் பணிகள் இன்னும் முடிவடையாதது ஏன்? என்பது குறித்து, மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த சர்க்கரை முகமது, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.159.70 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணி தொடங்கி பல ஆண்டுகளாகியும் இன்னும் பணிகள் முடியவில்லை. இதனால் பெரியார் பேருந்து நிலைய கட்டுமானப் பணியை விரைவில் முடிக்கக்கோரி, உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப் பட்டது.
அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 2021 மார்ச் 31-க்குள் கட்டுமானப் பணிகள் முடியும் என மதுரை மாநகராட்சி சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை பணிகள் நிறைவடையவில்லை. இதனால் மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தில் பெரியார் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் 2021 மார்ச் 31-க்குள் நிறைவடையும் என மாநகராட்சி சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் பணிகள் முடிவடையாதது ஏன்? இது தொடர்பாக மதுரை மாநகராட்சி ஆணையர் டிச. 10-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago