கிருஷ்ணகிரியில் பள்ளியில் தேங்கிய மழை நீரால் மாணவர்கள் அவதி :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நாள் முழுவதும் விட்டுவிட்டுப் பெய்த மழையால் பொதுமக்கள் அவதியுற்றனர்.

கிருஷ்ணகிரியில் நேற்றும் காலை முதலே தொடர்ந்து மழை பெய்ததால் தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி விடுமுறை அறிவித்தார். கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே மழைவிட்டுவிட்டு பெய்து கொண்டிருந்தது.

இதனால் 6-ம் வகுப்பு முதல் கல்லூரி வரைக்கும் சிரமத்துடன் மாணவர்கள் சென்று வந்தனர். இதேபோல் பணிக்கு செல்வோர், சாலையோர காய்கறி வியாபாரிகள் என அனைவரும் அவதியுற்றனர்.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இல்லாததால், குளிர்ந்த சீதோஷ்ணநிலை நிலவியது.

நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. பழுதான சாலைகள், மண் சாலைகள் சேறும், சகதியுமாக மாறியதுடன், நடந்து செல்லவே மக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு விவரம் (மிமீ) தேன்கனிக்கோட்டை 38, பாரூர் 35.2, ஊத்தங்கரை 33.6, நெடுங்கல் 27.6, அஞ்செட்டி, ராயக்கோட்டை, போச்சம்பள்ளி தலா 23, தளி 25 , சூளகிரி, கிருஷ்ணகிரியில் 18 மிமீ மழை பதிவாகி இருந்தது.

பள்ளி வளாகம்

அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால், மழைநீர் பள்ளி வளாகத்தில் தேங்கி நின்றது. இதனால் வகுப்பறைக்குள் செல்ல முடியாமல் மாணவர்கள் அவதியுற்றனர். பள்ளியில் தண்ணீர் தேங்காதவாறு தொடர்புடைய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற் றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தருமபுரியில் கனமழை

தருமபுரி மாவட்டத்தில் பரவலாக நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்ச அளவாக பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 47.20 மி.மீட்டர் மழை பதிவானது. இதுதவிர, மாரண்ட அள்ளி பகுதியில் 45 மி.மீ, ஒகேனக்கல் பகுதியில் 38 மி.மீ, பென்னாகரம், அரூர் பகுதிகளில் தலா 32 மி.மீ, தருமபுரி பகுதியில் 31 மி.மீ, பாலக்கோடு பகுதியில் 21.40 மி.மீ பெய்துள்ளது.

கனமழையால் பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகள், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கத் தொடங்கியது. இரவு முழுக்க பெய்த தொடர் மழை காரணமாக தருமபுரி அடுத்த பாரதிபுரம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்தும், வேருடன் சாய்ந்தும் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்