திருச்சி மாவட்டத்தில் தொடர் மழையால் 1,167 நீர்நிலைகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
திருச்சியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் திருச்சி மாவட்டத்தில் ஏரி, குளம், கண்மாய் என பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.
பொதுப்பணித் துறை ஆற்றுப் பாதுகாப்பு கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 76 நீர்நிலைகளில் 15, பொதுப்பணித் துறை அரியாறு கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 98 நீர்நிலைகளில் 18, மாநகராட்சி பகுதியில் உள்ள 13 நீர்நிலைகளில் 3, கிராம ஊராட்சிப் பகுதியில் 1,131 நீர்நிலைகள் என 1,167 நீர்நிலைகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
இந்நிலையில், நேற்று மணிகண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட இனாம்குளத்தூர் பெரிய ஏரி, சித்தாநத்தம் ஊராட்சி சேந்தன்குளம், கரியாம்பட்டி உடையாகுளம், சீகம்பட்டி ஊராட்சி சோலைக்குளம் மற்றும் மணப்பாறை பகுதியில் உள்ள மணப்பாறைப்பட்டி குளம் ஆகியவற்றில் தண்ணீர் நிரம்பியுள்ளதை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நீர்நிலைகளுக்கான தண்ணீர் வரத்து மற்றும் தண்ணீர் வெளியேற்றம் ஆகியன குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, மணப்பாறை ராஜீவ் நகரில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளையும், மணப்பாறை பேருந்து நிலையத்தில் உள்ள வடிகாலுக்கு வரும் தண்ணீரையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, எம்.பி செ.ஜோதிமணி, எம்எல்ஏக்கள் எம்.பழனியாண்டி, ப.அப்துல் சமது மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், நீர்வள ஆதாரத் துறை, வருவாய்த் துறை, நகராட்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago