முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு - காதுகேளாத மாணவர்கள் களப்பயணம் :

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் 25 பேர் நேற்று களப்பயணம் மேற்கொண்டனர்.

இக்களப்பயணத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு கூறியதாவது:

அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வள காப்புமையம் மற்றும் வனத்துறையினருடன் இணைந்து, தாமிரபரணி தடங்களில் இயற்கை நடை என்ற களப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அனைத்து நீர்நிலைகளை பாதுகாப்பாக வைப்பதற்காக, `நெல்லை நீர்வளம்’ என்ற இயக்கம் மாவட்டத்தில் செயல் படுகிறது. நெல்லை நீர்வளம் என்ற இணையதளத்தில் அனைத்து தன்னார்வலர்களும் பதிவு செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளை சீரமைக்கவேண்டும் என்றால் தொடர்ந்து 4 மாதங்கள் இப்பணியில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். இதில் ஒரு பகுதியாக பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நீர்நிலைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பணியில் ஈடுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

வனச்சரக அலுவலர் சரவண குமார், அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வள காப்புமையம் ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் வெற்றிசெல்வி, பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதோர் பள்ளி முதல்வர் ஜான்சன், மாவட்ட மாற்று திறனாளிகள் (முடநீக்கி யல்) அலுவலர் பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE