பணகுடி ஆலந்துறை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு : விவசாயப் பணிக்கு சென்ற 10 பேர் தீயணைப்பு படையினரால் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி ஆலந்துறை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய 10 விவசாய பணியாளர்களை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

பணகுடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்தது. இதனால், இப்பகுதியிலுள்ள ஆலந்துறை ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கு ஏற்படுமுன் ஆலந்துறை ஆற்றை கடந்து காலையிலேயே விவசாயப் பணிக்காக அதேபகுதியைச் சேர்ந்த செல்வி, ஸ்டெல்லா, ஆஸ்டின், எட்வின் உள்ளிட்ட 10 பேர் சென்றிருந்தனர்.

இந்நிலையில், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஆற்றை கடந்து வரமுயற்சித்தும் முடியாமல் தவித்தனர். இது குறித்து, வள்ளியூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று கயிறுகட்டி மறுகரையில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதிக்கு திருநெல்வேலி மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் உஷா, ராதாபுரம் வட்டாட்சியர் ஜேசு ராஜன் சென்று மீட்பு பணியை துரிதப்படுத்தினர். தீயணைப்பு படையினர் 10 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

பாபநாசம் அணை

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும், பிற இடங்களிலும் நேற்று மிதமான மழை நீடித்தது. பாளையங்கோட்டை, திருநெல்வேலி பகுதிகளில் நேற்று நண்பகலில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பாபநாசத்தில் 6 மி.மீ, கொடுமுடியாறில் 5 மி.மீ, ராதாபுரத்தில் 4 மி.மீ மழை பெய்திருந்தது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 135.85 அடியாக இருந்தது. அணைக்கு 1,527 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,204 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 86 அடியாக இருந்தது. அணை க்கு 62 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை யிலிருந்து 10 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

தென்காசி மாவட்டம்: தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் சற்று குறைந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணையில் 32 மி.மீ., கடனாநதி அணையில் 7 மி.மீ., சிவகிரியில் 6 மி.மீ., கருப்பாநதி அணையில் 3 மி.மீ., தென்காசியில் 1 மி.மீ. மழை பதிவானது. கடனாநதி அணை நீர்மட்டம் 82.10 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 80.75 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 68.24 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 122 அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது.

வயல்களில் தண்ணீர் சூழ்ந்தது

புளியரை அருகே கால்வாய் கரை உடைந்ததால் வயல்களில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பயிர்கள் பாதிக்கப்பட்டன.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அணைகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் பரவலாக நெல் சாகுபடி பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

புளியரையில் சாஸ்தா பத்து குளம் நிரம்பி உபரி நீர் மறுகால் செல்கிறது. இந்நிலையில் மறுகால் செல்லும் கால்வாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால், அருகில் உள்ள சுமார் 50 ஏக்கர் வயல்களை தண்ணீர் சூழ்ந்தது. சமீபத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரி மூழ்கின.

இதுகுறித்து, தகவல் அறிந்ததும் பொதுப்பணித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து சென்று, உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி சரி செய்ய நடவடிக்கை எடுத்தனர். நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE