அவிநாசி 16-வது வார்டு முத்துசெட்டிபாளையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி, பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செங்காடு கிளைசார்பில், அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட16-வது வார்டு பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். முத்துசெட்டிபாளையம் பகுதியில் 20ஆண்டுகளுக்கு முன்பு, சாக்கடை கட்டப்பட்டது. தற்போது சாக்கடை மிகவும் பழுதடைந்ததன் காரணமாக, கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. மழை காலங்களில் சாக்கடை கழிவு நீர், வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
முத்துசெட்டிபாளையம் பொதுக்கழிப்பிடம் 4 ஆண்டுகளுக்கு முன்புகட்டி முடிக்கப்பட்ட நிலையிலும்,மக்கள் பயன்பாட்டுக்கு இன்னும்கொண்டுவரப்படவில்லை. அதேபகுதியில் திருவள்ளுவர் அரசு பள்ளிஅருகே உள்ள சாக்கடை கால்வாய்குறுகியநிலையில் உள்ளதால், பள்ளி வளாகத்துக்குள் சாக்கடை நீர்புகுந்துவிடுகிறது. மாணவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படும் நிலை உண்டாகிறது. சேவூர் சாலை முதல் கால்நடை மருத்துவமனை வரை பழைய சாக்கடை கால்வாய்க்கு மேலே சிமெண்ட் மட்டுமே பூசப்பட்டுள்ளது, இதனால் சாக்கடை தற்போது மீண்டும் பழுதடைந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
மனுவை பெற்றுக்கொண்ட பேரூராட்சி அதிகாரிகள், கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றித்தரப்படும் என உறுதியளித்தனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஏ. ஈஸ்வரமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, ரமேஷ்உட்பட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago