சின்னாண்டிபாளையத்தில் மண்ணில் புதைந்ததால் கட்டிடம் இடிக்கப்பட்ட இடத்தில் - மீண்டும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட எதிர்ப்பு :

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர் சின்னாண்டிபாளையத்தில் மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டிடம் மண்ணில் புதைந்ததால் இடிக்கப்பட்டது. அதே இடத்தில் மீண்டும் கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் பகுதி சின்னாண்டிபாளையத்தில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகள், கடந்த 2018-ம் ஆண்டு ரூ. 29.3 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டன. ஆண்டிபாளையத்தில் அமைந்துள்ள 70 ஏக்கர் பரப்பளவிலான குளத்துக்கு நேர் எதிரே இந்த இடம் அமைந்துள்ளது. 1910-ம் ஆண்டு அரசு ஆவணங்களின் படி, இடம் நீர்நிலையாக உள்ளதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கட்டுமானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புகார் அளித்து வந்தனர். 10 நாட்களுக்கு முன்னர்கட்டிடம் மண்ணுக்குள் புதையத்தொடங்கியதை கண்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கட்டிடம் இடிக்கப்பட்டது.

இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது: குளம் போன்ற ஆழமான இடத்தில் கட்டிடம் கட்ட ஏதுவாக, பலநூறு லோடுகளுக்கும் மேலாக மண்கொட்டப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மண் இளகிய தன்மையுடன் இருப்பதால், சுமார் 20 அடி ஆழத்துக்கு அஸ்திவாரம் அமைத்தாலும், கட்டிடம் வலுவாக இருக்காது. இதனால் கட்டிடத்தை ஒப்பந்ததாரர் இடித்துவிட்டு, இடிக்கப்பட்ட கட்டிடப் பகுதியில் புதிய கட்டுமானத்தை தொடங்கி உள்ளனர். மீண்டும் அதே இடத்தில் கட்டிடம் வேண்டாம் என்பதே எங்களின் நிலைப்பாடு.

ஆண்டிபாளையத்தில் அமைந்துள்ள பெரியகுளத்து நீர்சின்னகுளத்துக்கு வராதபடி, கான்கிரீட் கொண்டு பாலத்தை அடைத்து இடிந்த வளாகத்தை காப்பாற்றி வருகின்றனர். கான்கிரீட்டை திறந்துவிட்டால், இடிந்த வளாகத்துக்குள் தண்ணீர் வந்துவிடும். மீண்டும் அதே இடத்தில்கட்டிடம் கட்டுவதால், மக்களின்வரிப்பணம் மேலும் விரயமாகும்.இதனை தடுக்க சின்னாண்டிபாளையம், குளத்துப்புதூர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி, வழக்கு தொடுக்க உள்ளோம் என்றனர்.

திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘கட்டிடம் இடிக்கப்பட்ட இடத்தில் மற்ற பணிகள் நடந்து வருகின்றன. மீண்டும் அதே இடத்தில் ஒப்பந்ததாரரே கட்டிடத்தை கட்டித்தர உள்ளார். அதையொட்டிய பிற பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன,’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்