திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் பெரியார் புத்தகம் மொத்தமாக விநியோகம் செய்ததாகக் கூறி, பள்ளியை பாஜகவினர் நேற்று முற்றுகையிட்டனர்.
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள நூலகத்துக்கு தன்னார்வலர்கள் புத்தகங்கள் வழங்கி வந்தனர். அதன் ஒருபகுதியாக, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பெரியார் எழுதிய, ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற புத்தகம் சுமார் 2 ஆயிரம் பிரதிகளை தன்னார்வலர் ஒருவர் வழங்கியதாக தெரிகிறது. இதனைஅறிந்த திருப்பூர் வடக்கு மாவட்டதலைவர் செந்தில்வேல் தலைமையில் பாஜகவினர் சுமார் 10 பேர் பள்ளிவளாகத்துக்கு வந்து, புத்தகங்களை யாருக்கும் தரக்கூடாது என்றனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: பெண் குழந்தைகள் அனைவருக்கும் எதற்காக இத்தனை புத்தகங்கள் வழங்க வேண்டும். நூலகத்துக்கு என்றால் அதற்கான பிரதிகள் மட்டும் வழங்கியிருக்க வேண்டும். பெண்களின் ஒழுக்கம் உள்ளிட்ட விஷயங்கள் இதில் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக எதற்காக 2 ஆயிரம் பிரதிகள்வழங்கினார்கள் என, பள்ளித் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோரிடம் கேள்வி எழுப்பினர்.
தன்னார்வலர் நூலகத்துக்கு வழங்கியதை நாங்கள் யாருக்கும்வழங்கவில்லை. அவை புத்தகபண்டல்களாக அப்படியே இருக்கின்றன. இது தொடர்பாக கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்படும் என ஆசிரியர்கள், கட்சியினரிடம் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ் கூறும்போது, ‘‘திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வேண்டும் என தன்னார்வலர்களிடம் கோரியிருந்தனர். அதன்படி, பெரியார் எழுதிய ’பெண் ஏன் அடிமையானாள்’ புத்தகங்கள் மொத்தமாக வந்தன. அதை பண்டலாக இறக்கி வைத்துள்ளனர். யாருக்கும் விநியோகிக்கவில்லை. அவை அப்படியே சம்பந்தப்பட்ட தன்னார்வலரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு விடும். இனி இதுபோன்று நடக்காது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago