ஊத்தங்கரை இருளர் கிராமத்தில் கைத்தறி துறை அமைச்சர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் நேற்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் பழங்குடியின மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

ஊத்தங்கரை வட்டம் மூன்றாம்பட்டி ஊராட்சி தளபதி நகரில் நேற்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். மேலும், உடனடியாக 15 நபர்களுக்கு தலா ரூ.12 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளை அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து, 6 பேருக்கு மின்னணு ரேஷன் அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானுரெட்டி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), மதியழகன் (பர்கூர்) ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர் கல்வி பயில தடையாக உள்ள மின்சார வசதி குறித்த கோரிக்கை உள்ளிட்ட கோரிக்கைகள் உடனே நிறைவேற்றித் தரப்படும் எனவும் அமைச்சர் உறுதி அளித்தார். அப்பகுதி மாணவ, மாணவியர் உயர்கல்வி பயில நிதி வசதி இல்லை எனில் தன்னை அணுகினால் சொந்த செலவில் கல்லூரி கட்டணம் செலுத்துவதாக அவர் உறுதி அளித்தார்.

பின்னர் அமைச்சர் கூறியது:

தளபதி நகரில் வசிக்கும் இருளர் இன மக்கள் 300 குடும்பத்தினருக்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கடந்த 10 ஆண்டுகளாக கிடைக்கவில்லை என்ற தகவலை செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி மூலம் அறிய முடிந்தது. அதைத் தொடர்ந்து தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் இப்பகுதி மக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்துள்ளோம். ஒருவாரத்தில் அவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும். 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், ஆழ்குழாய் கிணறு, தனிநபர் இல்ல கழிப்பறைகள், சாலை வசதி போன்றவையும் உடனடியாக நிறைவேற்றித் தரப்படும். இதர கோரிக்கைகள் படிப்படியாக 6 மாத காலத்துக்குள் நிறைவேற்றப்படும். தற்போது தமிழகத்தில் நடைபெறும் அரசு மக்களுக்கான அரசு. மக்களின் தேவையை அறிந்து ஒவ்வொரு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு கூறினார்.

இறுதியில், அமைச்சர் அப்பகுதி மக்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் செங்குட்டுவன், அண்ணாமலை, முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் சுகவனம், வெற்றிசெல்வன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் சூரியகுமார், ஜோலார்பேட்டை சட்டப் பேரவை உறுப்பினர் தேவராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன், தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்