கரூர் மாவட்டத்தில் அதிக மழைப் பொழிவால் பாதிக்கப்படும்போது - 40,000 பேரை தங்க வைக்க 77 இடங்கள் தயார் : கண்காணிப்பு அலுவலர் டி.பி.ராஜேஷ் தகவல்

By செய்திப்பிரிவு

கரூர் மாவட்டத்தில் அதிக மழைப் பொழிவால் பாதிப்பு ஏற்படும்போது, 40 ஆயிரம் பேரை தங்கவைக்கும் வகையில் 77 இடங்கள் தயாராக உள்ளன என மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் டி.பி.ராஜேஷ் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள கரூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு கைத்தறி ஆணையருமான டி.பி.ராஜேஷ் தலைமையில் ஆட்சியர் த.பிரபுசங்கர் முன்னிலையில், 2-வது நாள் ஆய்வுப் பணிகள் நேற்று நடைபெற்றன.

கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் உள்ள இரட்டை வாய்க்கால் மற்றும் சுங்கவாயில் கணபதி நகர் பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் வைத்து அகற்றும் பணிகளை பார்வையிட்ட கண்காணிப்பு அலுவலர் டி.பி.ராஜேஷ் செய்தியாளர்களிடம் கூறியது:

மாவட்டத்தில் அதிகம் மழைநீர் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்குள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல 1,775 பேர் தயார் நிலையில் உள்ளனர்.

அதிக மழைப் பொழிவால் பாதிப்பு ஏற்படும்போது, 40 ஆயிரம் பேரை தங்கவைக்கும் வகையில் 77 இடங்கள் தயார் நிலையில் உள்ளன. மாவட்டம் முழுவதும் மழைக்கு 74 குடிசைகள் சேதம் அடைந்துள்ளன. அதற்குரிய நிவாரணம் மாவட்ட நிர்வாகம் மூலம் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து உணவுப் பொருட்களும் கையிருப்பில் உள்ளன. அவசர உதவிக்காக மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர சேவை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மையத்தை 1077 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்புகொண்டு, வீடுகளில், சாலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பது தொடர்பாக புகார் தெரிவிக்கலாம். இதுவரை 80 புகார்கள் வரப்பெற்று, அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.

மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் கொசு உற்பத்தியை தடுக்க கொசுமருந்து அடிக்கும் பணியும் மாநகராட்சி நிர்வாகம் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் எந்த விதமான சவாலையும் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்றார்.

குளித்தலை வட்டத்தில் வடசேரி, புழுதேரி, பாதிரிப்பட்டி குளங்கள் மற்றும் கரையாம்பட்டி, வடசேரிப்பட்டி பகுதிகளில் வயலுக்குள் மழைநீர் புகுந்துள்ள பகுதிகளை மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் டி.பி.ராஜேஷ், ஆட்சியர் த.பிரபுசங்கர், குளித்தலை எம்எல்ஏ இரா.மாணிக்கம் ஆகியோர் பார்வையிட்டு, விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்