புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே தூர்ந்து கிடந்த கால்வாயை குடி வரி வசூலித்து தூர்வாரிய விவசாயிகளை மத்திய மண்டல ஐஜி வே.பாலகிருஷ்ணன் நேரில் சென்று பாராட்டினார்.
விராலிமலை வட்டம் ஆவூர் அருகே செங்களாக்குடியில் 420 ஏக்கரில் பெரியகுளம் எனும் கண்மாய் உள்ளது. நீர்வள ஆதாரத் துறையின் கீரனூர் பிரிவு அலுவலகத்தின் கண்காணிப்பில் உள்ள இந்த கண்மாய்க்கு நீர்பழனி, ஒளவையார்பட்டி கண்மாய்களில் இருந்து வெளியேறும் உபரி நீரானது அணைக்கட்டு வழியாக வந்தடையும்.
பெரியகுளத்தின் தண்ணீரைப் பயன்படுத்தி சுமார் ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. ஆனால், இந்த குளத்துக்கு அணைக்கட்டிலிருந்து வரும் வரத்து வாய்க்கால் சுமார் ஒன்றரை கிலோ மீட்டருக்கு தூர்ந்துவிட்டது. நீர்வளத் துறையினரிடம் பல முறை வலியுறுத்தியும் தூர்வாரிக் கொடுக்காததால் மழை காலத்திலும் கண்மாயில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை இருந்து வந்தது.
இதையடுத்து, செங்களாக்குடி கிராம மக்கள் குடி வரி மற்றும் தன்னார்வலர்களிடம் இருந்து நிதி வசூலித்து கால்வாய் தூர்வாரப்பட்டது. தற்போது, கண்மாயானது ஏறக்குறைய முழு கொள்ளளவை எட்டி வருகிறது.
இதன்மூலம் பல ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய் நிரம்பி வருவது விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூர்வாரப்பட்ட கால்வாய், கண்மாயை பார்வையிட்டதோடு, நீராதாரத்தை உயர்த்துவதற்கு அர்ப்பணிப்போடு செயல்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களை காவல் துறையின் மத்திய மண்டல ஐஜி வே.பாலகிருஷ்ணன் நேற்று நேரில் சென்று பாராட்டினார். அப்போது, ஊருக்குள் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாத்தூர் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கால்வாய் தூர்வாரும் பணியை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ நேற்று முன்தினம் பார்வையிட்டு, விவசாயிகளை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago