திருநெல்வேலி மாநகராட்சியில் வார்டு மறுசீரமைப்பில் உள்ள - குளறுபடியை சரி செய்யக்கோரி வழக்கு : ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவு

By செய்திப்பிரிவு

நெல்லை மாநகாட்சி வார்டு மறுசீரமைப்பு குளறுபடியை சரி செய்யாமல் வாக்காளர் பட்டியலை செயல்படுத்த தடை கோரிய மனுவுக்கு மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை பேட்டையை சேர்ந்த பைசல் கனி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

நெல்லை மாநகராட்சியில் நெல்லை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர் ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. வார்டு மறுசீரமைப்புப் பணியில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. குறிப்பாக மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள பகுதிகள் தச்சநல்லூர் மண்டலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அங்கு வசிப்போர் வாக்களிக்க 7 கி.மீ. தூரம் செல்ல வேண்டியுள்ளது.

இந்த வார்டு மறுசீரமைப்புக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இருப்பினும் வார்டு மறுசீரமைப்பு அடிப்படையில் 2021-ல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

எனவே, வார்டு மறுசீரமைப்பு குறித்த மக்களின் கருத்துகளை பரிசீலனை செய்யாமல், நெல்லை மாநகராட்சி இறுதி வாக்காளர் பட்டியலை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு குறித்து நெல்லை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்