தி.மலை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. செய்யாறு செல்வ விநாயகர் கோயில் தெருவில் உள்ள வீடுகளில், மழை நீர் புகுந்துள்ளது. மேலும், ஒரு வீட்டில் ஊற்று நீர் வெளியேறுகிறது. இதேபோல், மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது.
பல இடங்களில் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன. சேத்துப்பட்டு அருகே போளூர் நெடுஞ்சாலையில் நம்பேடு கிராமத்தில் உள்ள 2 புளிய மரங்கள் மற்றும் கீழ்கொடுங்காலூர் அடுத்த புன்னை – ஓசூர் சாலையோரத்தில் இருந்த புளிய மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மீட்பு பணிக்கு 370 காவலர்கள்
தி.மலை மாவட்டத்துக்கு 80 பேரிடர் மேலாண்மை பயிற்சி முடித்த 370 காவலர்கள், மழை வெள்ள மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். மேலும் மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையின் இலவச தொலைபேசி எண் – 1077 மற்றும் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு 04175 – 233266 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மழை பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். மேலும் ‘ஹலோ திருவண்ணாமலை போலீஸ்’ 99885 76666 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி சராசரியாக 27.16 மி.மீ., மழை பெய்துள்ளது. ஆரணியில் 25.7, செய்யாறில் 54.5, செங்கத்தில் 12.4, ஜமுனாமரத்தூரில் 18.8, வந்தவாசியில் 52.3, போளூரில் 15.7, திருவண்ணாமலையில் 14, தண்டராம்பட்டில் 19, கலசப்பாக்கத்தில் 11, சேத்துப்பட்டில் 28.2, கீழ்பென்னாத்தூரில் 22.2, வெம்பாக்கத்தில் 52.2 மி.மீ., மழை பெய்துள்ளது.
அணைகள் நிலவரம்
சாத்தனூர் அணைக்கு விநாடிக்கு வரும் 1,890 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. மதகுகள் மாற்றப்படுவதால், 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 97.45 அடியாக பராமரிக்கப்படுகிறது.59.04 அடி உயரம் உள்ள குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 57.07 அடியாக பராமரிக்கப்படு கிறது. அணைக்கு விநாடிக்கு வரும் 120 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
62.32 அடி உயரம் உள்ள செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 56.51 அடியை எட்டியது. 22.97 அடி உயரம் உள்ள மிருகண்டாநதி அணையின் நீர்மட்டம் 21.32 அடியாக பராமரிக்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago