வடகிழக்கு பருவமழை காலத்தில் பயிர்களை பாதுகாப்பது எப்படி? : விவசாயிகளுக்கு வேளாண்மை துறை ஆலோசனை

By செய்திப்பிரிவு

வட கிழக்கு பருவமழை காலத்தில் பயிர்களை பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து திருப்பத்துார் வேளாண்மை இணை இயக்குநர் ராஜசேகர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’’திருப்பத்துார் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 936 மி.மீட்டர். நவம்பர் மாதம் வரை 619 மி.மீட்டருக்கு பதிலாக 987 மி.மீட்டர் அளவு மழையளவு பெய்துள்ளது. இது இயல்பான மழையளவை விட 368 மி.மீட்டர் கூடுதலாகும்.

தற்போது, வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதைத் தொடர்ந்து அதிக மழை பெய்யவும், பலத்த காற்று வீசவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, தற்போது பயிர்கள் முளைப்பு பருவம் முதல் முதிர்வு பருவம் வரை பல்வேறு வளர்ச்சி நிலைகளில் உள்ளன.

அதிக மழை காரணமாக பயிர்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. ஆகவே, விவசாயிகள் பல்வேறு தொழில்நுட்பங்களை கையாண்டு பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

நெல் பயிரில் வெள்ள பாதிப்பின்போது கடைபிடிக்க வேண்டிய முறைகள் நாற்று, நாற்றங்கால் பருவத்தின்போது கூடுதல் நீரை வடிகட்ட வேண்டும். நாற்றங்கால் அமைக்கும் போது மேட்டுப்பாத்தி நாற்றங்கால்களை அமைக்க வேண்டும். நேரடி விதைப்புக்கு முளைக்கட்டிய விதைகளை விதைக்கவேண்டும். வளர்ச்சி பருவத்தின் போது கூடுதல் நீரை வடிகட்ட வேண்டும்.

இளம் பயிர்களுக்கு 1 கிலோ ஜிங்க் சல்பேட், 2 கிலோ யூரியா ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைகளின் மீது தெளிக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் நுண்ணுயிரினை 20 கிலோ மணல் அல்லது தொழு உரத்துடன் கலந்து வயல்களில் இடவேண்டும். பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

பூக்கும் மற்றும் பால்பிடிக்கும் பருவத்தில், கூடுதல் நீரை வடிகட்ட வேண்டும். தண்டு உருவாகும் பருவத்திலும். பூக்கும் பருவத்திலும் உள்ள பயிர்களுக்கு 1 கிலோ 400 கிராம் டி.ஏ.பி. உரத்தினை 10 லிட்டர் நீரில் முதல் நாள் ஊறவைத்து மறுநாள் வடிகட்டி, அக்கரைசலுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ பொட்டாஷ் உரத்தினை, 190 லிட்டர் நீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

ஓர் ஏக்கருக்கு 50 கிலோ அமோனியம் சல்பேட் அல்லது 22 கிலோ யூரியாவுடன் 18 கிலோ பொட்டாஷியம் கலந்து மேலுரமாக இடவேண்டும்.

தென்னை மரங்களில் மேற் கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள் மேலும், வடகிழக்கு பருவமழையின் போது கனமழையினால் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடிகால் வசதி அவசியம்

எனவே, புயல் காற்றில் இருந்து தென்னை மரங்களை பாதுகாக்க விவசாயிகள் நல்ல காய்ப்புள்ள தென்னந்தோப்புகளில் முதிர்ந்த தேங்காய்களை அறுவடை செய்ய வேண்டும். தென்னை மரங்களில் அதிக அளவில் இளநீர் குலைகள் இருப்பின் சில இளநீர் குலைகளை பறித்து மரத்தில் அதிக எடை இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த பருவத்தில் சாகுபடி செய்துள்ள மக்காச்சோளம், உளுந்து, தட்டைப்பயறு, கரும்பு, துவரை உள்ளிட்ட பயிர்களின் வயல்களில் மழை நீர் தேங்கி அழுகிடாமல் இருக்க தக்க வடிகால் வசதி செய்யப்படவேண்டியது அவசியமாகும்.

யூரியா, ஜிப்சம், வேப்பம் புண்ணாக்கு போன்றவற்றை 5.4.1 விகிதத்தில் கலந்து இடவேண்டும். இலை வழியாக டைஅம்மோனியம் பாஸ்பேட் தெளிக்கலாம். தழைச்சத்துடன் சாம்பல் சத்து உரம் சேர்த்து இடலாம். நுண்ணூட்ட உரமிடல் ஆகியவைகளை மேற் கொள்ளலாம்.

இதில், மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் அருகில் உள்ள வட்டார வேளாண்மை துறை அலுவலர்களை விவசாயிகள் உடனடியாகத் தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.

பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்