பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைவு - கனமழை அறிவிப்பால் தொடரும் வெள்ள அபாய எச்சரிக்கை :

By செய்திப்பிரிவு

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைவால் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து நேற்று மாலை விநாடிக்கு 1434 கனஅடியாகக் குறைந்தது. இருப்பினும், அடுத்த இரு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்பதால், கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்த கனமழையால் அணைக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வரை நீர் வரத்து அதிகரித்தது. அணையின் பாதுகாப்பு கருதி, பாசனத்துக்கும், பவானி ஆற்றில் உபரியாகவும் தொடர்ந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது.

நேற்று காலை 8 மணிக்கு அணைக்கு விநாடிக்கு 4307 கனஅடி நீர் வந்த நிலையில், மாலை 6 மணிக்கு நீர்வரத்து 1434 கன அடியாகக் குறைந்தது. இதனால், பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பு 100 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. அதோடு கீழ்பவானி பாசனத்துக்கு விநாடிக்கு 1300 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது தற்காலிகமானது என்று தெரிவித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், அடுத்த இரு நாட்களும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் நீர்வரத்து எந்த நேரத்திலும் அதிகரிக்கலாம் என்றனர். எனவே, பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கும், மேட்டூரில் இருந்து 20 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் நேற்று முன் தினம் இரவு பரவலாக மழை பெய்த நிலையில், அதிகபட்சமாக சென்னிமலையில் 29 மி.மீ. மழை பதிவானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்