நெல்லை மாவட்டத்தில் திருப்திகரமான அளவுக்கு மழை - பிசான சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம் : 35 ஆயிரம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்படுகிறது

திருநெல்வேலி மாவட்டத்தில் திருப்திகரமான அளவுக்கு மழை பெய்துள்ள நிலையில், பிசான சாகுபடி பணிகளில் விவசாயிகள் முழுவீச்சில் களமிறங்கியிருக்கிறார்கள். இப்பருவத்தில் 35 ஆயிரம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணைகள், குளங்களில் தண்ணீர் பெருமளவுக்கு சேகரமாகியிருக்கிறது. மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் இம்மாதத்தில் இதுவரை பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

அம்பாசமுத்திரம்- 195, சேரன்மகாதேவி- 234.80, மணிமுத்தாறு- 166.60, நாங்குநேரி- 155, பாளையங்கோட்டை- 217, பாபநாசம்- 71, ராதாபுரம்- 97.80, திருநெல்வேலி- 128.10. மொத்தமாக மாவட்டத்தில் இதுவரை 1,265.30 மி.மீ. மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டு இதேகாலத்தில் 327.10 மி.மீ. மழையும், 2019-ம் ஆண்டில் 306.90 மி.மீ. மழையும் பெய்திருந்தது.

பாபநாசத்தில் நேற்று காலை நிலவரப்படி 91.64 சதவீதம் தண்ணீர் உள்ளது. சேர்வலாறு அணையில் 75.64 சதவீதமும், மணிமுத்தாறு அணையில் 47.45, வடக்கு பச்சையாறு அணையில் 17.29, நம்பியாறு அணையில் 11.90, கொடுமுடியாறு அணையில் 94.12 சதவீதம் தண்ணீர் உள்ளது.

அணைகளில் திருப்திகரமாக தண்ணீர் இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்குமுன் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி தாமிரபரணி பாசனத்துக்கு உட்பட்ட வடக்கு கோடைமேலழகியான் கால்வாயில் 31 கனஅடி, தெற்கு கோடைமேலழகியான் கால்வாயில் 15 கனஅடி, நதியுண்ணி கால்வாயில் 44 கனஅடி, கன்னடியன் கால்வாயில் 200 கனஅடி, மருதூர் மேலக்கால்வாயில் 700 கனஅடி, மருதூர் கீழக்கால்வாயில் 355 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மணிமுத்தாறு பெருங்காலில் 10 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

பிரதான அணைகளில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பதாலும், பெரும்பாலான குளங்கள் நிரம்பியிருப்பதாலும் இவ்வாண்டு பிசான பருவத்தில் தண்ணீர் பற்றாக்குறைக்கு வாய்ப்பில்லை. பல்வேறு இடங்களில் விவசாயிகள் பிசான நெல் சாகுபடி பணிகளைத் தொடங்கியுள்ளனர். மாவட்டத்தில் இப்பருவத்தில் 35 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும் என்று வேளாண்மைத்துறை தெரிவித்திருக்கிறது.

திருநெல்வேலியில் தாமிரபரணி பாசனத்துக்கு உட்பட்ட கருப்பந்துறை பகுதியில் சாகுபடிக்கு முன்னேற்பாடாக நிலத்தை உழுது பண்படுத்தும் பணிகள் முழுவீச்சில் தற்போது நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து இப்பகுதி விவசாயி மணி கூறும்போது, ``உழவுப்பணிகளுக்குப்பின் ஓரிரு நாட்களில் நாற்றுப் பாவுதலை தொடங்குவோம்.

இப்பகுதி களில் 3 மாத பயிரான சம்பா ரகங்கங்கள் அதிகளவில் பயிரிடப்படும்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்