வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன
கனமழை காரணமாக வேலூரின் முக்கிய ஆறுகளான பாலாறு மற்றும் பொன்னை ஆறு, கவுண்டன்ய ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றோரங்களில் வசித்து வரும் மக்கள் மீட்கப்பட்டு அவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க வேலூர் மாவட்டத்தில் 27 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. நேற்று காலை 10 மணிக்கு பிறகு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. பிற்பகல் 2 மணிக்கு மேல் சில இடங்களில் விட்டு, விட்டு மழை பெய்தது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கன மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லட்சுமி பிரியா, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து, ஓச்சேரி கோவிந்தவாடி ஏரிக்கு அணைக்கட்டில் இருந்து கால்வாயில் செல்லும் தண்ணீரை பார்வையிட்டார். அதேபோல, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பாலாறு அணைக்கட்டு பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, கலவை அடுத்த மாந்தாங்கல் கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிறப்பு முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக் கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் ஆர்.காந்தி அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சி யர் பாஸ்கர பாண்டியன், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபா சத்யன், வேளாண் இணை இயக்குனர் வேலாயுதம் உட்பட பலர் உடனிருந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை வெள்ளதால் பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தென்காசி எஸ்.ஜவஹர், ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, மழை வெள்ளம் சூழப்பட்ட பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தென்காசி எஸ்.ஜவஹர் உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago