தேவர் ஜெயந்தியன்று போலீஸ் மற்றும் வருவாய்த்துறை வாகனம் மீது ஏறி நடனம் ஆடிய வழக்கில் பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியரை கைது செய்ய உயர் நீதி மன்றம் தடை விதித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக். 30-ல் தேவர் குரு பூஜை நடந்தது. அப்போது திருவாடனை வட்டாட்சியரின் ஜீப் மற்றும் போலீஸ் வேன் மீது சிலர் ஏறி நின்று நடனம் ஆடினர்.
இதையடுத்து மண்டலமாணிக்கம் பகுதி யைச் சேர்ந்த 13 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் கமுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் 3 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் போலீஸாரால் தேடப்படும் பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பி.செந்தில்குமார் என்பவர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வழக்கறிஞர் ‘‘சம்பவம் நடந்தபோது மனுதாரர் மண்டல மாணிக்கத்தில் இல்லை. கல்லூரியில் இருந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையோரும், மனுதாரரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவ்வழக்கில் போலீஸார் சேர்த்துள்ளனர். இதனால் முன் ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்றார்.
பின்னர், அடுத்த விசாரணையை நாளைக்கு (நவ. 11) ஒத்திவைத்து, அதுவரை மனுதாரரை கைது செய்யக்கூடாது, மனுதாரரின் கல்லூரி வருகைப் பதிவேடு மற்றும் சம்பவத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்களை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago