திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அணை மற்றும் பிற பகுதிகளில் மழை நீடிக்கிறது. அணைகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது. நேற்று பகலிலும் 11 மணிவரை மழை தூறியது. அதன்பின் மழையின்றி, வானம் மேகமூட்டமாகவே இருந்தது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெரும்பான்மையான குளங்கள் 75 சதவீதத்துக்கு மேல் நிரம்பியுள்ளன. களக்காடு பகுதியில் 4 நாட்களுக்கு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால், களக்காடு, பத்மநேரி, மாவடி, நாங்குநேரி வட்டார குளங்களும், திருக்குறுங்குடி மலையில் பெய்த மழையால் திருக்குறுங்குடி பெரியகுளம், வள்ளியூர், ராதாபுரம் வட்டார குளங்களும் நீர்வரத்து பெற்றுள்ளன. இதுபோல், தாமிர பரணி ஆற்றுப்பாசன குளங்களும் முக்கால்வாசி நிரம்பியுள்ளன.
காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 57 மிமீ மழை பெய்திருந்தது. பிற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
நாங்குநேரி- 32, மூலக்கரைப் பட்டி மற்றும் நம்பியாறில் தலா 28, சேரன்மகாதேவி- 27.4, பாபநாசம்- 22, களக்காடு- 21.2, ராதாபுரம் மற்றும் சேர்வலாறு- தலா 21, அம்பாசமுத்திரம்- 20, மணிமுத்தாறு- 18.8, திருநெல் வேலி- 13.8.
பாபநாசம் அணைக்கு 1,335 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 1,006 கனஅடி திறந்துவிடப்பட்டது. நீர்மட்டம் 135.80 அடியாக இருந்தது. மணி முத்தாறு அணைக்கு 282 கனஅடி தண்ணீர் வருகிறது. 10 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. நீர்மட்டம் 85.55 அடியாக இருந்தது.
மீனவர்கள் ஓய்வு
`கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உரு வாகி இருப்பதால் மீனவர்கள் 5 நாட்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்’ என்று, வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதனால், திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் மறுஅறிவிப்பு வரும்வரையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை எச்சரித்திருக்கிறது. இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 10 மீனவர் கிராமங்களை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. நாட்டுப்படகுகள் கரையில் பாதுகாப்பான பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவில் விடிய விடிய மழை பெய்தது. நேற்று பகலிலும் மழை தூறிக்கொண்டே இருந்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகிரியில் 82 மி.மீ. மழை பதிவானது. குண்டாறு அணை மற்றும் அடவிநயினார் அணையில் தலா 48, செங்கோட்டையில் 46, ஆய்க்குடியில் 42, கருப்பாநதி அணையில் 31, தென்காசியில் 24.80, சங்கரன்கோவிலில் 20, ராமநதி அணையில் 15, கடனாநதி அணையில் 12 மி.மீ. மழை பதிவானது. கடனாநதி அணைக்கு 89 கனஅடி நீர் வந்தது. 115 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 85 அடி உயரம் உள்ள இந்த அணை நீர்மட்டம் 82.40 அடியாக இருந்தது. ராமநதி அணைக்கு 18 கனஅடி நீர் வந்தது. 30 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 84 அடி உயரம் உள்ள இந்த அணை நீர்மட்டம் 81.75 அடியாக இருந்தது.72 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணை நீர்மட்டம் 68.24 அடியில் நிலைநிறுத்தப்பட்டு, அணைக்கு வரும் 32 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளதால் அணைக்கு வரும் 110 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. அடவிநயினார் அணைக்கு 45 கனஅடி நீர் வந்தது. அதே அளவு நீர் வெளியேற்றப்பட்டது. 132.22 அடி உயரம் உள்ள இந்த அணை நீர்மட்டம் 122.25 அடியாக இருந்தது.
கனமழை எச்சரிக்கையால் நேற்று திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago