முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் :

திருநெல்வேலியில் முருகன் கோயில்களில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி யான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது.

திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலை கடந்த சில நாட்களாக தாமிரபரணி தண்ணீர் சூழ்ந்துள்ள நிலையில், கோயிலில் இருந்து உற்சவர் சிலை மேலக்கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 4-ம் தேதி இக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா சிறப்பு வழிபாடுகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் மேலக்கோயிலில் யாகசாலை பூஜை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்று வருகிறது. நேற்று மாலையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. அம்பாள் தபசு காட்சி, சுவாமி காட்சி கொடுத்தல் வைபவமும் கோயில் உள்பகுதியில் இன்று காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் ஆறுமுக நயினார் சந்நிதி, சந்திப்பு பாளையஞ்சாலை குமரன் கோயில், வண்ணார்பேட்டை குட்டத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில், பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் சுப்பிரமணியர் சந்நிதி, மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயில், குறிச்சி சொக்கநாதர் கோயில், பேட்டை பால்வண்ணநாதர் கோயில், தச்சநல்லூர் நெல்லையப்பர் கோயில் என்று பல்வேறு கோயில்களிலும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

கோவில்பட்டி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயிலில் கந்தசஷ்டி விழாவில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு கோயில் உட்பிரகாரத்தில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. குதிரை வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி, யானைமுகா சூரன், சிங்கபத்மா சூரன், தாரகா சூரன், பானுகோபன், சூர பத்மன் ஆகியோரை வதம் செய்தார். விழாவில், பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

கோவில்பட்டி சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் சஷ்டி நிறைவு விழாவாக காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேக சந்தன காப்பு அலங்காரம் நடந்தது.

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் நேற்று பகல் 12 மணிக்கு சண்முகர் அர்ச்சனை வழிபாடு நடந்தது. மாலை 5.30 மணியளவில் சுவாமி வீரவேல் ஏந்தி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி போர்க்களத்துக்கு வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து 6 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தி லுள்ள முருகன் கோயில்களில் நேற்று சூரசம்ஹாரம் நடை பெற்றது.

குமாரகோயில் வேளிமலை முருகன் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், கன்னியாகுமரி முருகன் குன்றம் கோயில், தோவாளை முருகன் கோயில், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் சிறமடம், ஆரல்வாய்மொழி வடக்கூர், பூதப்பாண்டி, தெரிசனங்கோப்பு, வடிவீஸ்வரம், கடுக்கரை, தாழக்குடி, மருங்கூர், குளச்சல் உட்பட பல இடங்களில் உள்ள கோயில்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்