சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கியவர் கைது :

By செய்திப்பிரிவு

வாணியம்பாடி அடுத்த ஆலங் காயத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய் வாளரை தாக்கிய இளைஞரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணி யம்பாடி வட்டம் ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாயக் கனூர் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(30). இவர், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக மணிகண்டன் சொந்த ஊருக்கு வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க தனது வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மணிகண்டன் ஆலங்காயம் பகுதிக்கு வந்தார். அப்போது, ஆலங்காயம் சிறப்பு உதவி ஆய்வாளர் உமாபதி(53) தலை மையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த மணிகண்டனின் வாகனத்தை காவல் துறையினர் மடக்கினர். ஆனால், வாகனத்தை நிறுத்தாமல் மணிகண்டன் சென்றதால் ஆத்திரமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் உமாபதி அவரை பின்தொடர்ந்து விரட்டிச்சென்று ஆலங்காயம் பஜார்பகுதியில் மடக்கினார்.

பிறகு, மணிகண்டனிடம் இருந்து வாகன சாவியை வாங்கி இரு சக்கர வாகனத்தை பறி முதல் செய்ய முயன்றபோது மணிகண்டன் அதை தடுத்தார். அப்போது, அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால், ஆவேசமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் உமாபதி பொதுமக்கள் முன்னிலையில் மணிகண்டனின் கன்னத்தில் அறைந்தார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத மணிகண்டன் பதிலுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் உமாபதியை தாக்கினார். பொதுமக்கள் முன்னிலையில், இருவரும் கட்டிப்புரண்டு நடுரோட்டில் சண்டையிட்டனர். இதை அங்குள்ள சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதி வேற்றம் செய்தனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த ஆலங்காயம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று எஸ்எஸ்ஐ உமாபதியை தாக்கிய மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான பொது மக்கள் குவிந்துள்ள பஜார் பகுதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், வாகன ஓட்டியுடன் கட்டிப்புரண்டு நடுரோட்டில் சண்டையிட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்