வேலூர் மாநகராட்சியில் பொது மக்கள் குறைகளை தெரிவிக்க 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும், மழையால் சேதமடைந்த சாலைகளை ‘ஈர கலவை’ மூலம் தற்காலிகமாக சீர் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
வேலூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பில்டர்பெட் சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. சுமார் 1,900 மீட்டர் தொலைவு கொண்ட சாலை பணிகளை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப் பினர்கள் கார்த்திகேயன் (வேலூர்), நந்தகுமார் (அணைக்கட்டு) ஆகியோருடன் சென்று ஆய்வு செய்தார். அப்போது, சாலை பணிகளை விரைந்து முடிப்பதுடன் நடை பாதையில் வைக்கப்பட்டுள்ள ஸ்டீல் கைப்பிடிகளை யாரும் திருடிச் செல்லாதபடி பாதுகாப்பாக இருக்கும்படி அமைக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், அங்குள்ள குடிநீர் குழாய் வால்வு பகுதியில் தண்ணீர் வீணாகச் செல்வதை தடுக்க உத்தரவிட்டார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘மாநகராட்சியில் குறைகள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் 1077 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். மாநகராட்சியில் மோசமாக இருக்கும் சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க வெட் மிக்ஸ் (ஈர கலவை) எனப்படும் ஜல்லி, சிமென்ட், மணல் கலந்த கலவை போடுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிர மடைந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைத்து செயல்படும் கட்டுப் பாட்டு அறையில் பெறப்படும் தகவல்களின் பேரில் நடவடிக்கை எடுக்கிறோம். சில இடங்களில் மழை நீர் உள்ளே புகுந்த இடங்களை கண்டறிந்து சரி செய்துள்ளோம். வரும் நாட்களில் மழை இருக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம் மழையை எதிர்கொள்ள தயாராக உள்ளது.
பொதுமக்களிடம் நான் வைக்கும் கோரிக்கை என்ன வென்றால், மழையால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றபோதும், மற்றொருவர் நீர்நிலையை கடந்த போதும் உயிரிழந்துள்ளனர். எனவே, யாரும் நீர்நிலை பகுதி களை கடக்க வேண்டாம்.
மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல், சோளம், நிலக்கடலை `பயிர்கள் 49 ஹெக்டேர் நீரில் மூழ்கியுள்ளன. ஊரக வளர்ச்சி பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து கால்வாய்களை நவம்பர் 10 (இன்று) மாலைக்குள் சீரமைக்க வேண்டும் என பிடிஓக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.
அப்போது, வேலூர் மாநக ராட்சி ஆணையர் சங்கரன், பொறியாளர் கண்ணன், சுகாதார அலுவலர் மணிவண்ணன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago