திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் முகாமில் பெறப்பட்ட - மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு :

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சு.வினீத் தலைமையில் நேற்று நடந்தது. இதில், பல்லடம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனு:

கணபதிபாளையத்தில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு பாத்தியப்பட்ட நிலத்தில் 196 வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டன. இதில் ஊராட்சியை சேர்ந்த நிலமில்லாத தகுதிவாய்ந்த ஆதிதிராவிடர் குடும்பங்களை சேர்ந்த 154 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. இதில் 72 குடும்பங்களுக்கு பட்டாவுக்கு உரிய இடம் அளவீடு செய்து கொடுக்கப்பட்டு, மேற்படி இடத்தில் வசித்து வருகின்றனர். எஞ்சிய 82 குடும்பங்களுக்கு பட்டாவுக்குரிய இடத்தை அளவீடு செய்து தராததால், அவர்களுக்கு குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இடத்தை அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்ணிடம் மோசடி

திருப்பூர் பெரியார் காலனியை சேர்ந்த பெண் மதனா (45). இவர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தபின், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, வீட்டுமனை வழங்கக்கோரி எனது கணவருடன் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, நான் மனு அளித்தேன். இந்நிலையில், என்னை அலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்தார். மேலும் உங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு ரூ.2,500 கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அதனை நம்பி எனது வீட்டருகே அந்நபரை வரவழைத்து, என்னிடம் இருந்த ரூ.2,000-ஐ மட்டும் கொடுத்தேன். பணத்தை கொடுத்த பின்பு அந்நபரிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. அதனால், அந்நபர் கொடுத்த மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொண்டபோது மறுமுனையில் பேசிய நபர், தன்னை முத்தணம்பாளையம் கிராம உதவியாளர் குணசேகரன் என்று தெரிவித்துவிட்டு, அழைப்பை துண்டித்துவிட்டார். அங்கு விசாரித்தபோது, கிராம உதவியாளர் பணியிடம் காலியாக இருப்பது, தெரியவந்தது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன், என்றார்.

அமைச்சர் உத்தரவு

ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை சார்பில் அளிக்கப்பட்ட மனு: வேங்கிபாளையம், மரவபாளையம், ராமநாதபுரம், பீலிக்காம்பட்டி, ஜோதியம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து 70-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், தாயம்பாளையத்தில் உள்ள பள்ளிக்கு நடந்தே சென்று வருகின்றனர். எனவே வேங்கிபாளையம்- மரவபாளையம் வழியாக தாயம்பாளையம் வரை பேருந்து அல்லது சிற்றுந்து வசதி செய்து கொடுக்க வேண்டும், என குறிப்பிட்டுள்ளனர்.

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு திடீரென வந்த தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE