கிருஷ்ணகிரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : 171 வார்டுகளுக்கு 424 வாக்குச்சாவடிகள் :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வாக்குச்சாவடி வரைவு பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்துக்கேட்புக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. இதில், மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலையொட்டி, வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் வெளியிட்டார். அப்போது ஆட்சியர் கூறியதாவது:

ஓசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளுக்கு 248 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2 லட்சத்து 17 ஆயிரத்து 292 வாக்காளர்கள் உள்ளனர். இதே போல் கிருஷ்ணகிரி நகராட்சியில் 33 வார்டுகளுக்கு 66 வாக்குச்சாவடிகள், 55 ஆயிரத்து 431 வாக்காளர்களும், பர்கூர், காவேரிப்பட்டணம், நாகோஜனஹள்ளி, ஊத்தங்கரை,தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட 6 பேரூராட்சிகளில் 93 வார்டுகளுக்கு 110 வாக்குச்சாவடிகள், 84 ஆயிரத்து 692 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 171 வார்டுகளுக்கு 424 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 415 வாக் காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வாக்குச்சாவடி வரைவுபட்டியல்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களிலும், ஒவ்வொரு வார்டிலும் தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலரால் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியின்போது ஊராட்சிகள் உதவி இயக்குநர் வெங்கடாசலம், தேர்தல் தனி வட்டாட்சியர் ஜெயசங்கர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்