மழையில் நனைந்தபடி பள்ளிக்குச் சென்ற மாணவ, மாணவிகள் :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையால், பள்ளிக்கு மாணவ, மாணவிகள் நனைந்த படியேசென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய மழை நாள் முழுவதும் பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடியே சென்றனர்.

மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி கூறுகையில், மாவட்டத்தில் குறைவான அளவே மழை பெய்து உள்ளது. ஆகவே பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை. எதிர்வரும் மழையின் அளவைப் பொறுத்தே பள்ளிகளுக்கு விடு முறை வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்றார்.

நேற்று காலை 8 மணி நிலவரப் படி பெய்த மழையளவு (மிமீ) விவரம், ஊத்தங்கரை 21.2, ராயக்கோட்டை 17, போச்சம்பள்ளி 13.8, பாரூர் 12, தேன்கனிக் கோட்டை, கிருஷ்ணகிரி 4, ஓசூர் 2.2, அஞ்செட்டி5.4 , பெனுகொண்டாபுரம் 10, சூளகிரி 5, மற்றும் நெடுங்கல்லில் 9 மிமீ மழை பதிவாகி இருந்தது. கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 753 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 882 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணையில் 51 அடிக்கு தண்ணீர் உள்ளது.

அரூரில் 35 மி.மீட்டர் மழை

தருமபுரி மாவட்டம் முழுவதும் நேற்று முன் தினம் இரவு மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்ச அளவாக அரூரில் 35 மில்லி மீட்டர் மழை பதிவானது.

இதுதவிர, பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 22.60 மி.மீட்டர், தருமபுரி, மாரண்ட அள்ளி பகுதிகளில் தலா 6 மி.மீட்டர், பாலக்கோட்டில் 4 மி.மீட்டர், பென்னா கரத்தில் 3 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இதுதவிர, நேற்று காலை தொடங்கி பகல் முழுவதும் மாவட்டத்தில் அவ்வப்போது மிதமான தூறலுடன் கூடிய மழை பெய்தது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பணிக்கு செல்வோர், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வெளியில் செல்வோர் உட்பட அனைத்து தரப்பினரின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்கு உள்ளானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE