தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று 146 பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் மற்றும் 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள், சீர்மரபினர் என,சமூகநீதி கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சமூகநீதியை காப்பாற்ற வேண்டும் என புறாக்களை பறக்கவிட்டனர். பின்னர் ஆட்சியர் கி.செந்தில் ராஜிடம் அளித்த மனு விவரம்:
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக் கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் குறிப்பிட்ட சமுதாயத்துக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த 1-ம் தேதி தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தின் சமூகநீதியை பாதுகாக்கும் வகையில் இந்ததீர்ப்பு அமைந்துள்ளது. இதனைஎதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது. மேலும், 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க உடனடியாக புள்ளிவிவர சேகரிப்பு சட்டத்தின் கீழ்மக்கள் தொகை, கல்வி, சமூக நிலைமற்றும் அரசியலில் அவர்களின்பிரதிநிதித்துவம் போன்ற புள்ளிவிவரங்களை சேகரிக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டை கல்வி, வேலைவாய்ப்புகளில் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாறுகால் அமைப்பது எப்போது?
எட்டயபுரம் வட்டம் வெம்பூர் கிராம மக்கள் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: வெம்பூர் கிராமத்தில் ஆண்டாள் நகர் மற்றும் வடக்கு தெருவில் வாறுகால் அமைப்பதாக கூறி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜேசிபி மூலம் கால்வாய் தோண்டப்பட்டது. ஆனால், இதுவரை வாறுகால் அமைக்கப்படவில்லை. தோண்டிய கால்வாயில் தற்போது மழைநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விரைவாக வாறுகால் அமைக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணை கொலை
கோவில்பட்டி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த எம்.இந்திரா(50) என்பவர் அளித்த மனுவில், “ எனது தந்தை எஸ்.மாடசாமி என்ற எஸ்.எம்.சாமி சுதந்திர போராட்ட தியாகிக்கான ஓய்வூதியம் பெற்று வந்தார். அவர் கடந்த 2002-ல் காலமானார். அதன் பிறகு எனது தாய்வள்ளியம்மாள் ஓய்வூதியம் பெற்றுவந்தார். அவரும் 2013-ல் இறந்துவிட்டார். நான் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறேன். எனக்கு எந்த வருமானமும் கிடையாது. ஹோட்டலில் பாத்திரம் கழுவி பிழைப்பு நடத்தி வருகிறேன். எனது தந்தைக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியத்தை எனக்கு வழங்க கோரி கடந்த 9 ஆண்டுகளாக போராடி வருகிறேன். உயர் நீதிமன்ற கிளை எனக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியும் இதுவரை ஓய்வூதியம் வழங்கவில்லை. வரும் 26.01.2022-க்குள் ஓய்வூதியம் கிடைக்கச் செய்ய வேண்டும். இல்லையெனில் குடியரசு தினத்தன்று என்னை கருணைக் கொலை செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago