வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள - தயார் நிலையில் தீயணைப்பு, மீட்பு படையினர் :

வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள புதுக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தயார்நிலையில் இருப்பதாக மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு அலுவலர் இ.பானுபிரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்கள் உள்ளன. இங்கு, தேவையான கருவிகளுடன் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

கனமழையால் நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் நீர்நிலைகளில் குளிக்க செல்ல வேண்டாம். குளம், குட்டைகளில் வேடிக்கை பார்க்க செல்வது, செல்ஃபி எடுப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிற்சி பெற்ற 20 கமாண்டோ வீரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் எத்தகைய அசாதாரண சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் அளவுக்கு பயிற்சி பெற்றவர்கள். மேலும், தேவையான கருவிகளும் உள்ளன. மக்கள் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம்.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையை 101, மாநில பேரிடர் கட்டுப்பாட்டு அறையை 1070, மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு அறையை 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE