தரகம்பட்டி அருகே குடிநீர் கேட்டு கொட்டும் மழையில் காலி குடங்கள், குடையுடன் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியம் தரகம்பட்டி அருகேயுள்ள பசுபதிபாளையம் பகுதியில் கடந்த இரு வாரங்களாக காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதைக் கண்டித்தும், குடிநீர் வழங்கக்கோரியும் கொட்டும் மழையில் காலிக் குடங்களுடன் குடையைப் பிடித்துக் கொண்டு பெண்கள் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் பாலவிடுதி போலீஸார், ஊராட்சி பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
கரூர் மாவட்டம் புனவாசிப்பட்டி வழியாக மதுரை மாவட்டம் மேலூர், திருமங்கலத்துக்கு கூட்டு குடிநீர் திட்ட குழாய் மூலம் காவிரி நீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், புனவாசிபட்டி பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நேற்று சாலை சேதமடைந்தது. இதை உடனடியாக சீரமைக்க வேண்டும். வயல்களில் தண்ணீர் புகுந்ததால் அவற்றுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால் மக்கள் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago