தடப்பள்ளி பாசனப்பகுதியில் கால்வாய் உடைப்பு சீரமைப்பு நிறைவு : சேதம் குறித்து வேளாண் இணை இயக்குநர் ஆய்வு

By செய்திப்பிரிவு

கோபி அருகே தடப்பள்ளி பாசனப்பகுதியில் ஏற்பட்ட வாய்க்கால் உடைப்பு சரிசெய்யப்பட்டது. இப்பகுதியில் நெல் நடவுப்பணி நடைபெறாததால், சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குநர் சின்னசாமி தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரு நாட்களுக்கு முன்னர் கனமழை பெய்தது. இதனால், கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தடப்பள்ளி வாய்க்காலில் தண்ணீர் சென்றடைந்தது. இத்துடன் கீழ்பவானி கசிவுநீரும் சேர்ந்ததால், தடப்பள்ளி வாய்க்காலில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இதனால், கோபியை அடுத்த தொட்டிபாளையம் கிராமத்தின் அருகில் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு, விளைநிலங்களில் வெள்ள நீர் புகுந்தது. உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கிய பொதுப்பணித்துறையினர், கரையைச் சரிப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணி நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

இந்நிலையில், வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேதங்களை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் கூறும்போது, கரை உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் சில நாற்றாங்கால் பகுதிகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது.

நெல் நடவுப் பணிகள் இன்னும் தொடங்கப்படாததால் அதிக சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது, என்றார். ஆய்வின் போது, வேளாண்மை துணை இயக்குநர்கள் ஆர்.அசோக், அ.நே ஆசைத்தம்பி மற்றும் கோபி வேளாண்மை உதவி இயக்குநர் வே.ஜீவதயாளன், வேளாண்மை அலுவலர் சிவப்பிரகாஷ், உதவி வேளாண்மை அலுவலர் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்