சேலம் மாவட்ட நீர்நிலைகளில் பேரிடர் கால மீட்பு செயல்விளக்கம் :

வட கிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்புப் பணிகள் தொடர்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகளில் தீயணைப்பு மீட்புப் பணிக்குழு சார்பில் பேரிடர் கால மீட்பு செயல்விளக்கம் நடைபெற்றது.

தென்மேற்குப் பருவமழையின்போது, சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் சராசரிக்கும் கூடுதலாக மழை பெய்து, பெரும்பாலான நீர் நிலைகள் ஓரளவு நிரம்பியுள்ளன. இந்நிலையில், தற்போது தொடங்கியுள்ள வட கிழக்குப் பருவமழை தொடக்கத்திலேயே தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தில் ஆங்காங்கே திடீர் கனமழை பெய்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக, சேலம், ஏற்காடு, வீரகனூர், பெத்தநாயக்கன் பாளையம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. ஏற்காடு மலையில் பெய்த கனமழையால், திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி வட்டாரத்தில் பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், கோனேரிப்பட்டி, நெடுங்குளம், சிலுவம்பாளையம் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு ஒரு மணி நேரத்துக்கும் கூடுதலாக கனமழை பெய்தது. இதனால், அப்பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் மழை நீர் குளம் போல தேங்கி, நெல், கரும்பு உள்ளிட்டவைகள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், தீயணைப்பு மீட்புப்பணிக் குழு சார்பில் பேரிடர் காலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செயல்விளக்க ஒத்திகை நடைபெற்றது.

சேலம் கன்னங்குறிச்சி மூக்கனேரியில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு தலைமையில், ஏரி நீரில் சிக்கியவரை மீட்பது தொடர்பான ஒத்திகை நடந்தது. மேலும், ஏரியில் படர்ந்திருந்த ஆகாயத்தாமரை செடிகளையும் அவர்கள் அகற்றினர். ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி பண்ணப்பட்டி ஏரியில் ஓமலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜசேகரன் தலைமையிலும், மேட்டூர் காவிரியில் மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலும் மீட்புப் பணி ஒத்திகை நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்