பவானிசாகர் அணை நீர்மட்டம் 104 அடியை எட்டுகிறது : விநாடிக்கு 3500 கனஅடி உபரிநீர் திறப்பு

By செய்திப்பிரிவு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியை நெருங்கும் நிலையில், பவானி ஆற்றில் விநாடிக்கு 3500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கரையோரப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் மூலம் 2.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. பவானிசாகர் அணையில் 105 அடி வரை நீரினைத் தேக்கி வைக்க முடியும். அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

நேற்று மாலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு விநாடிக்கு 5025 கனஅடி நீர் வரத்து இருந்த நிலையில், அணையின் நீர் மட்டம் 103. 84 அடியாக இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு விநாடிக்கு 1500 கனஅடியும், பவானி ஆற்றில் 3500 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பாசனத்துக்கான நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும், அணைக்கு நீர் வரத்து அதிகரித்தால், உபரி நீர் திறப்பும் அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கரையோரப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பவானி, கவுந்தப்பாடி, கொடுமுடி உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. ஈரோடு மாவட்ட மழையளவு விவரம் (மி.மீ.)

கவுந்தப்பாடி 62, பவானி 48, கோபி 30, குண்டேரிப்பள்ளம் 29, கொடிவேரி, 24, சத்தியமங்கலம், கொடுமுடி, மொடக்குறிச்சி 23, பெருந்துறை 21, ஈரோடு 14.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்