வீடுர் அணையிலிருந்து விநாடி க்கு 529 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுவதை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன் முடி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடகிழக்குப் பருவமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நேற்று வரை திண்டிவனம் வட்டத்தில் உள்ள வீடூர் அணையில் 30 அடிவரை நீர் நிரம்பியுள்ளது. மேலும் அணைக்கு விநாடிக்கு 1,500 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து விநாடிக்கு 529 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று வீடூர் அணையை பார்வையிட்டார். அணையில் ரூ.42 கோடி மதிப்பீட்டில் தூர்வாருதல், மதகுகள் சீரமைத்தல் மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும், வெளியேற்றப்படும் தண்ணீரையும் ஆய்வு செய்தார். தொடர் மழை பெய்து வருவதால் அணையின் நீர் கொள்ளளவினை அவ்வப்போது கண்காணித்திட வேண்டும்.அணையின் பாதுகாப்பு தன்மையினை தொடர்ந்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
ரூ.51 கோடியில் எல்லீஸ்சத்திரம்
தடுப்பணை சீரமைக்கப்படும்
இதேபோல் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம் எல்லீஸ்சத்திரம் தடுப்பணையினை நேற்று அமைச்சர் க.பொன்முடி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:ஏனாதிமங்கலம் ஊராட்சியில் தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே 1950-ம் ஆண்டு கட்டப்பட்ட எல்லீஸ் தடுப்பணை 70 ஆண்டு கால பழமையானது. தற்போது தடுப்பணையின் கதவணை ஒரு பகுதி சேதமடைந்து மழைநீர் வெளியேறி வருகிறது.தடுப்பணைக்கு முழுமையாக பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்பணையிலிருந்து நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது. பழுதடைந்துள்ள தடுப்பணையினை முழுமையாக சீரமைக்கும் பொருட்டு ரூ.51 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.மேலும், விழுப்புரம் வட்டம் தளவானூர் தடுப்பணை ரூ.15.கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாதா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் புக ழேந்தி, லட்சுமணன், மாவட்டஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், நீர்வளத்துறை செயற் பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago