திருச்சி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையில் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகள் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்து வருகிறது. இதனால், மாநகரின் பல்வேறு இடங்களிலும் தார் சாலைகள் பெயர்ந்து, குண்டும் குழியுமாகிவிட்டன. புதை சாக்கடை பணிகள் நடைபெறும் பகுதிகளிலும் சாலைகள் சேறும், சகதியுமாகி மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
தேசியக் கல்லூரி அருகே திண்டுக்கல் சாலையில் கடந்த 10 நாட்களாக மழைநீர் வழிந்தோடுகிறது. இதனால், சேதமடைந்த சாலையில் மழைநீர் தேங்கியிருப்பதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்தநிலையில், திண்டுக்கல் சாலையில் நேற்று நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்தபோது, அந்தப் பகுதியில் மழைநீர் வடிகாலை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, மழைநீரை வடியச் செய்யும் வகையில் அந்தக் கட்டிடங்களுக்கு முன் சாலையோரம் பொக்லைன் மூலம் தற்காலிக மழைநீர் வடிகால் தோண்டும் பணியில் நெடுஞ் சாலைத் துறையினர் நேற்று ஈடுபட்டனர்.
மாநகரில் பல்வேறு இடங்களில் காலி மனைகளில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது. இந்தத் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தி யாகி பொதுமக்களுக்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.
பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிகால் ஆக்கிரமிக்கப் பட்டிருப்பதும், அதை அப்புறப் படுத்த தொடர்புடைய அரசுத் துறைகள் நடவடிக்கை எடுக்காத துமே இதற்கு காரணம் என குற்றம் சாட்டும் பொதுமக்கள், மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை உடன டியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago