மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை - மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்க சட்டத் திருத்தம் : மதிமுக செயற்குழு கூட்டத்தில் கோரிக்கை

By செய்திப்பிரிவு

புளியங்குடியில் மதிமுக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட பொருளாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ, மருத்துவர் அணி மாநில செயலாளர் சுப்பாராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புளியங்குடி நகர செயலாளர் ஜாகிர் உசேன் வரவேற்றார்.

மாவட்டச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.

நகராட்சி, பேரூராட்சிகளுக்கு போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெற தேர்தல் பணி மாநில துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன் நன்றி கூறினார்.

கூட்டத்தில், தென்காசி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சிகள், பேரூராட்சிகளில் வெற்றி வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து திமுகவுடன் கலந்து பேசி போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. திருமங்கலம்- கொல்லம் நான்குவழிச் சாலையை விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மாற்று வழியில் அமைக்க வேண்டும்.

மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கும் வகையில் தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

தென்காசி மாவட்டத்தில் தொடர் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மேல்மருவத்தூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருநெல்வேலி, தென்காசி, சங்கரன்கோவில் வழியாக சென்னைக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்