தொடர் கனமழை காரணமாக - தரைமட்ட பாலம் வெள்ளத்தில் மூழ்கியது : 5 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிப்பு

தொடர் மழை காரணமாக தரைமட்ட பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால், பொள்ளாச்சி அருகே 5 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், 10 கிமீ தொலைவுக்கு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனைமலை அடுத்த ஆழியாறு, அர்த்தநாரிபாளையம் வனப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஜமீன் கோட்டாம்பட்டி, கெங்கம்பாளையம், சோமந்துறை, காளியப்பகவுண்டன்புதூர் கிராம மக்கள் பயன்படுத்தி வரும் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் இவ்வழியாக 10 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் வசிப்பவர்கள் சுமார் 10 கி.மீ தொலைவுக்கு சுற்றி செல்கின்றனர்.

தொடர் மழையால் ஆற்றில் வெள்ளத்தின் அளவு அதிகரித்து வருகிறது. ஆபத்தை உணராமல் அந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலத்தின் மீது நடந்து செல்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து நான்கு கிராமங்களில் உள்ள தரைப்பாலங்களுக்கு பதிலாக புதிய மேம்பாலம் கட்டி தர வேண்டுமென்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘‘நாங்கள் இந்தப் பிரச்சினையை கடந்த 30 ஆண்டுகளாக சந்தித்து வருகிறோம். உயர்மட்ட பாலம் கட்டித்தரக் கோரி அரசுக்கு பலமுறை மனு அனுப்பி உள்ளோம். இதுவரை தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. மழைக்காலங்களில் காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, எங்களால் கிராமத்திலிருந்து அருகே உள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாது. சுமார் 10 கிமீ, சுற்றிச் செல்ல வேண்டும். தரைமட்ட பாலத்தை அகற்றி விட்டு, அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும். புதிதாக சாலையும் அமைத்துத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்